மேற்கு வங்காள மாநிலம் பிர்பம் மாவட்டம் ராம்பூர்ஹத்திலுள்ள பர்ஷல் கிராமத்தின் துணைத் தலைவராக பாது ஷேய்க் இருந்தார். இவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் ஆவார். இந்நிலையில் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் ஷேய்க் மீது வெடிகுண்டு வீசி பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் பலத்த காயம் அடைந்த பாது ஷேய்க் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இவருடைய சடலம் சொந்தஊரான போக்டுய் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது. இந்த கொலை காரணமாக அந்த கிராமத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. மேலும் ஒரு கும்பல் வன்முறையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போக்டுய் கிராமத்திலுள்ள வீடுகளை சூறையாடிய நிலையில், கோபமடைந்த அந்த கும்பல் பல்வேறு வீடுகளுக்கு தீ வைத்தது. இதன் காரணமாக சுமார் 10 பேர் உயிருடன் எரித்து கொல்லப்பட்டனர். அதன்பின் ஒரே வீட்டில் இருந்து 7 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.