பழமை வாய்ந்த யானை தந்தங்களை விற்பனை செய்ய முயன்ற 9 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி பகுதியில் யானை தந்தங்கள் விற்பனை செய்யப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் வனச்சரகர் டேவிட்ராஜ் தலைமையில் வனத்துறையினர் 3 குழுக்களாக பிரிந்து அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தேவதானப்பட்டி அடுத்துள்ள புல்லக்காபட்டி அருகே உள்ள புறவழி சாலையில் சிலர் சந்தேகப்படும்படி சாக்குப் பையுடன் நின்று கொண்டிருந்தனர். இதனை பார்த்த வனத்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்த விசாரணையில் அவர்கள் தேவதானப்பட்டியை சேர்ந்த பாக்கியராஜ் (30), பாலமுருகன் (23), பிரகாஷ் (29), முத்தையா (57), தேனியை சேர்ந்த சரத்குமார் (30), விஜயகுமார் (60), திண்டுக்கல்லை சேர்ந்த அப்துல்லா (34), மற்றும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த சின்னராசு (29), சிவக்குமார் (42) என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் வைத்திருந்த சாக்குப்பையில் பழமைவாய்ந்த இரண்டு யானை தந்தங்கள் இருந்துள்ளது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த வனத்துறையினர் உடனடியாக அங்கிருந்த 9 பேரையும் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். இதனை தொடர்ந்து வனத்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் கைது செய்யப்பட்டவர்களுக்கு தந்தத்தின் உண்மையான மதிப்பு தெரியாததால் இந்த கும்பலை சேர்ந்த ஒருவர் 10 நாட்களுக்கு முன்பு தந்தத்தின் விலை குறித்து ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரியிடம் விசாரித்துள்ளார்.
அந்த வனத்துறை அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த 10 நாட்களாக வனத்துறையினர் இந்த கும்பலை வலைவீசி தேடி வந்த நிலையில் இவர்கள் புல்லக்காபட்டியில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் கைதான 9 பேரையும் கொடைக்கானலில் உள்ள மாவட்ட வன அலுவலகத்திற்கு அழைத்து சென்று அவர்களுக்கு யானை தந்தங்கள் எங்கிருந்து கிடைத்தது என்று கிடுக்குபிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.