போடிமெட்டு பகுதியில் தொடர்ந்து மண்சரிவு ஏற்பட்டதால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் வடகிழக்கு பருவமழை காரணமாக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் போடி மெட்டு, குரங்கணி, கொட்டகுடி போன்ற பகுதியில் இடைவிடாது பெய்த கனமழை காரணமாக அப்பகுதியில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் பாறைகள் உருண்டு சாலையின் குறுக்கே விழுந்துள்ளது. இதனையடுத்து நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இருப்பினும் தொடர்ந்து மழை பெய்ததால் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதனால் போக்குவரத்து முற்றிலும் பாதிப்படைந்துள்ளது. மேலும் தேசிய நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் இரவோடு இரவாக பொக்லைன் இயந்திரம் மூலம் பாறை மற்றும் மண் சரிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் இன்னும் பணி நிறைவடையாததால் மறு அறிவிப்பு வரும் வரை அப்பகுதியில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே போடியில் இருந்து கேரளாவில் பல்வேறு பகுதிகளுக்கு தோட்ட வேலைக்கு சென்ற தொழிலாளர்கள் வீடு திரும்ப முடியாமல் சோதனை சாவடியிலேயே இரவு வரை காத்திருந்து அவதியடைந்துள்ளனர்.