கடந்த 10 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் உள்ள குறைந்தபட்ச ஊதியத்தை உடனே உயர்த்த உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
கோவை மாவட்டம் வால்பாறை, நீலகிரி மாவட்டம், தேனி மாவட்டம், நெல்லை மாவட்டத்தில் உள்ள மாஞ்சோலை உள்ளிட்ட தேயிலை மற்றும் காபி எஸ்டேட்களில் 1.50லட்சம் நிரந்தர தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். வால்பாறை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்கள் தினக்கூலிகள் 347 ரூபாய் பெற்று வரும் நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக தினக்கூலி உயர்த்தபடவில்லை என்பது புகாராகும். தொடர் போராட்டங்களை தொடர்ந்து தோட்டத் தொழிலாளர்களுக்கு தினக்கூலியை 425 ரூபாய் 40 காசுகளாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டு கடந்த ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி தமிழ்நாடு அரசு வரைவு அரசானையை வெளியிட்டது.
ஆனால் 2 மாத கருத்து கேட்பிற்கு பிறகு புதிய அரசாணை பிறப்பிக்கப்படாதது ஏமாற்றம் அளிப்பதாக வால்பாறை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் வேதனையுடன் கூறியுள்ளனர். தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
பழைய சம்பள ஒப்பந்தம் இவ்வாண்டு ஜூலை 1- ஆம் தேதியுடன் முடிவடைந்தது. முன்னதாக அரசு நிர்வாகம், தோட்ட அதிபர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் இடையிலான முத்தரப்பு பேச்சுவார்த்தை 12 முறை நடந்த பிறகும், ஜூன் மாதம் தோல்வியில் முடிந்தது. விலைவாசி உயர்ந்து வரும் நிலையில் தினக்கூலி உயர்வு ஒப்பந்த கையெழுத்தாக அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். தோட்ட முதலாளிகள் விளங்க முன்வராததால் தினக்கூலி உயர்வை அரசாணை மூலமாக தங்களுக்கு உறுதிப்படுத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.