தொடர் மழை எதிரொலியாக பெரம்பலூரில் கத்தரி, வெண்டை உள்ளிட்ட நாட்டு காய்கறிகளின் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் விளைநிலங்கள் மழைநீரில் மூழ்கி காய்கறி சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக காய்கறி வரத்து மூன்றில் ஒரு பங்காகக் குறைந்து காய்கறிகளின் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது.
பெரம்பலூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கிலோ ரூபாய் 30-க்கு கீழ் விற்கப்பட்ட வெண்டை, கத்தரி, முள்ளங்கி, புடலை மற்றும் தக்காளி உள்ளிட்ட நாட்டு காய்கறிகள் 3 மடங்கு விலை உயர்ந்துள்ளது. கடந்த மாதம் கிலோ 10 ரூபாய்க்கு விற்பனையான முருங்கை, அவரை போன்ற காய்கள் கிலோ 150 ரூபாய்க்கு மேல் உயர்ந்திருப்பது இல்லத்தரசிகளை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. விலை உயர்வால் காய்கறிகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்டவில்லை என காய்கறி விற்பனையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.