ஈரோடு அருகே பத்தாம் வகுப்பில் மகன் தோல்வி அடைந்த காரணத்தினால் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை அருகே கல்பாவி தொட்டிப்பாளையத்தை சேர்ந்த அப்புசாமி என்பவர் ஆம்னி வேன் வைத்து ஓட்டி வருகிறார். மனைவி சுமதி அருகில் உள்ள தனியார் கம்பெனியில் கூலி வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு சஞ்சய் மற்றும் சந்துரு என்று இரண்டு மகன்கள் உள்ளனர். சஞ்சய் வைலம்பாடியில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த வருடம் அவர் பொது தேர்வு எழுதியிருந்தார். தேர்வு முடிவில் மூன்று பாடத்தில் அவர் தோல்வியானார். இதனால் அவரது தந்தை அப்புசாமி சஞ்சயை மீண்டும் டுடோரியல் காலேஜில் சேர்த்து விட்டுள்ளார்.
ஆனால் சஞ்சய் வகுப்புக்கு செல்ல மறுத்ததால் மனமுடைந்த அப்புசாமி கடந்த 1ம் தேதி வீட்டில் இருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்துவிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இவர் வயிற்று வலியால் துடித்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துவிட்டன. பின்னர் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்திருந்தன. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.