சென்னையை சேர்ந்த 9 வயது சிறுமி ஒரு மணிநேரத்தில் 45 வகையான உணவுகளை சமைத்து யூனிகோ உலக சாதனையை படைத்துள்ளார்.
சென்னை பழைய வண்ணாரப் பேட்டையைச் சேர்ந்த 9 வயது சிறுமி லட்சுமி சாய் ஸ்ரீ. ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் இவர் ஊரடங்கு காலத்தில் வீட்டிலேயே ஆன்லைன் வகுப்புகளில் கல்வி பயின்று வந்துள்ளார். சிறுவர்-சிறுமிகள் அதிகமாக இல்லத்திலேயே முடங்கி இருக்க வேண்டிய சூழ்நிலைக்கு தற்போதைய காலகட்டம் உள்ளது. இந்நிலையில் இந்த சூழ்நிலையை பயனுள்ளதாக மாற்றிய லட்சுமி ஒரு மணிநேரத்தில் 45 வகையான உணவுகளை சமைத்து சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற இந்த சாதனை முயற்சியில் தமிழர்களின் பாரம்பரிய உணவுகளான கம்பு தோசை, கேழ்வரகு இட்லி, கேழ்வரகு புட்டு என பல்வேறு சிறு தானியங்களை கொண்டு சைவ மற்றும் அசைவ சமையல் செய்துள்ளார். மேலும் மீன் வருவல், இறால் வறுவல், சிக்கன் 65 என்று அந்த அரங்கத்தையே நறுமணத்தால் ஈர்த்து விருந்து படைத்துள்ளார். ஊரடங்கு காலத்தில் ஓய்வு நேரங்களில் தாயுடன் இணைந்து சமையலுக்கு சிறு சிறு உதவிகளை செய்து வந்த லட்சுமி அதன் பின் அதன் மீது அதிக அளவு நாட்டம் கொண்டு உணவுகளை சமைக்க தொடங்கியுள்ளார்.
இவரின் ஆர்வத்தை பார்த்த தாயார் கலைமகள் யுனிகோ சாதனை முயற்சியில் ஈடுபடுத்தி அதை நடத்திக் காட்டியுள்ளார். சாதிப்பதற்கு வயது தடையில்லை. ஆர்வமும், முயற்சியும் இருந்தால் எத்தகைய சாதனையும் நிகழ்த்தலாம் என்பதற்கு சிறுமி லட்சுமி எடுத்துக்காட்டாக உள்ளார்.