பேஸ்புக்கில் அறிமுகமான நண்பரை சந்திக்க கர்நாடகாவிலிருந்து குடும்பத்தோடு வந்தவருக்கு ஒரு கோடி ரூபாய் லாட்டரி பரிசு விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள புத்தளத்தானி பரவன்னூர் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு லாட்டரி ஏஜென்சி நடத்தி வந்துள்ளார். இவரது லாட்டரி ஏஜென்சியில் பிரபாகரன் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சோகன் ஹல்ராம் என்பவருக்கும், பிரபாகரனுக்கும் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து பிரபாகரன் தனது வீட்டிற்கு வருமாறு சோகனை அடிக்கடி அழைத்த காரணத்தால் தனது குடும்பத்தினருடன் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கேரளாவில் உள்ள பிரபாகரன் வீட்டிற்கு சோகன் வந்துள்ளார். அப்போது பிரபாகரன் தான் வேலை பார்க்கும் லாட்டரி ஏஜென்சி குறித்து கூறியுள்ளார். அதோடு பம்பர் பரிசாக ஒரு கோடி ரூபாய் கேரளா லாட்டரியில் வழங்கப்படும் என்ற தகவலையும் தெரிவித்துள்ளார்.
இதனை அறிந்த சோகன் பிரபாகரன் மூலமாக 5 பேருக்கு 5 கோடி ரூபாய் பரிசு தொகை வழங்கக் கூடிய லாட்டரி சீட்டை வாங்கியுள்ளார். அதன் பின் அவர்கள் அனைவரும் கேரளாவில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு சென்று விட்டு, தனது குடும்பத்தினருடன் கர்நாடகா செல்வதற்கு சோகன் தயாராகியுள்ளார். இதனைத் தொடர்ந்து சோகன் தனது குடும்பத்தினருடன் ஊருக்கு செல்வதற்காக ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது, பிரபாகரன் அவரை தொடர்புகொண்டு சோகன் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதன்பின் மகிழ்ச்சியில் தத்தளித்த சோகனின் குடும்பத்தினர் கர்நாடகா செல்லாமல் தனக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு கிடைத்தததற்கு காரணமான பிரபாகரனின் வீட்டிற்கு சென்று அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.