மேற்கு வங்க மாநிலத்தில் வரும் ஜனவரி மாதம் முதல் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முழுமையாக பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது.
கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டன. பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு பிறகு நிலைமை சீரடைந்து தற்போது தான் மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். ஒவ்வொரு மாநிலங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் நேரடி வகுப்புகளுக்கு வந்து செல்கின்றனர். அந்தவகையில் மேற்கு வங்க மாநிலத்தில் நவம்பர் 7ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் நேரடி வகுப்புகளுக்கு வரத்தொடங்கினர். அதுமட்டுமில்லாமல் ஆன்லைன் மூலமாகவும் வகுப்புகள் எடுக்கப்பட்டது.
இந்நிலையில் ஜனவரி முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கோவிட் -19 விதிமுறைகளை பின்பற்றி முழுமையாக பள்ளிகள் திறக்க உள்ளதாக அம்மாநில பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. மாநில பாடத் திட்டக் குழு அனைத்து பாடத் திட்டங்களையும் ஒருங்கிணைத்து இரண்டு புத்தகங்களாக பிரித்து மாணவர்களுக்கு கற்பிக்கும் பணியை ஏற்கனவே முடித்துள்ளது. மேலும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் 100 நாட்கள் ஆறு முதல் ஏழாம் வகுப்பு பாடத்திட்டத்தில் இருந்து கற்பிக்கப்படும். இது முடிந்த பிறகு தற்போதைய பாடத் திட்டம் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு வருடத்திற்குள் இந்த விஷயங்கள் அனைத்தையும் கற்பிக்க முடியுமா? என்று மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். கல்வித்துறை ஊரடங்கின் போது அனைத்து வகுப்புகளின் பாடத்திட்டங்களையும் பகுதியாக குறைத்தது. எனவே அதை முடிப்பது ஒரு பிரச்சினையாக இருக்காது என்று கல்வி துறை விளக்கம் அளித்துள்ளது.