ரஷ்ய தாக்குதல் காரணமாக இதுவரையிலும் 61 மருத்துவமனைகள் சேதமடைந்து இருப்பதாக உக்ரைனின் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் இன்று 14-வது நாளாக நீடித்து வருகிறது. இதில் உக்ரைனின் பல நகரங்களை ஆக்கிரமித்து வரக்கூடிய ரஷ்ய படைகள் தலைநகரான கீவ்வை ஆக்கிரமிப்பதில் அதிக தீவிரம் காட்டி வருகிறது. இதன் காரணமாக உக்ரைன் மற்றும் ரஷ்ய படைகளுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது. இப்போரில் ரஷ்ய சார்பாக பாதுகாப்பு படையினர் மற்றும் உக்ரைன் தரப்பில் பாதுகாப்பு படையினர், பொதுமக்கள் என்று இருதரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் ரஷ்ய தாக்குதலால் இதுவரையிலும் 61 மருத்துவமனைகள் சேதமடைந்துள்ளன என்று உக்ரைனின் சுகாதார அமைச்சர் லியாஷ்கோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியபோது, “மருத்துவர்களுக்கு உதவும் மாநில அவசர சேவையின் பொது சேவைகள் மற்றும் சுகாதார ஊழியர்கள் காரணமாக இந்த மருத்துவமனைகள் மூடப்படாமல் அவர்கள் தொடர்ந்து பணிபுரிந்து வருகின்றனர்.
ரஷ்ய தாக்குதலுக்குப் பின் சேதமடைந்த ஜன்னல்கள் கொண்ட மருத்துவமனைகளாக அவை செயல்படுகிறது” என்று கூறினார். அதுமட்டுமல்லாமல் ரஷ்ய படையெடுப்பாளர்கள் ஜெனீவா உடன்படிக்கையை மீறுகிறார்கள். ஆகவே அவர்களால் ஜெனீவா ஒப்பந்தத்தினை மீறுதல் மற்றும் மனிதாபிமான பாதைகளை அனுமதிக்காதது தொடர்பாகஉக்ரைன் உலக சுகாதார நிறுவனத்துக்கு தெரிவித்துள்ளது என்று லியாஷ்கோ தெரிவித்தார்.