10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத பள்ளிகளை நிரந்தரமாக மூடுவதற்கு மாநில அரசு முடிவு செய்துள்ளது.
அசாம் மாநிலத்தில் பள்ளிகளின் கல்வித்தரம் மிகவும் மோசம் அடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2 வருடங்களாக பள்ளிகள் திறக்கப்படாத காரணத்தினால் மாணவர்கள் கல்வியில் மிகவும் பின்தங்கியுள்ளனர். அதோடு 2 வருடங்களாக தேர்வு நடைபெறாமல் இருந்ததால் அனைவரையும் ஆல்பாஸ் செய்ததும் மாணவர்கள் கல்வியில் பின் தங்கியதற்கு ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடந்து முடிந்த 10-ம் வகுப்பு பொது தேர்வில் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளின் மொத்த தேர்ச்சி 56.49 % ஆகும். இதனையடுத்து 34 அரசு பள்ளிகளில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவர்களின் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை. அதன் பிறகு 68 அரசு பள்ளிகளில் மொத்த மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 10% மட்டுமே ஆகும். இதன் காரணமாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ரனோஜ் பெங்கு ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதன்படி மாணவர்களுக்கு கல்வியை போதிப்பது மட்டும்தான் பள்ளிகளின் தலையாய கடமையாகும். அந்த கடமையை பள்ளிகள் சரிவர செய்யாத நிலையில், எதற்காக பள்ளிகள் மட்டும் செயல்பட வேண்டும். மக்களின் வரிப்பணம் தான் வீணாகிறது என்று ஆதங்கமாக கூறியுள்ளார். அதன் பிறகு ஒருவர் கூட தேர்ச்சி பெறாத 34 பள்ளிகளையும் நிரந்தரமாக மூட போவதாகவும் அமைச்சர் அறிவித்துள்ளார். இந்த பள்ளிகளை மூடுவதால் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகும் என்று அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு அமைச்சர் அருகில் உள்ள பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும் 34 அரசு பள்ளிகளையும் நிரந்தரமாக மூடுவதாக அமைச்சர் அறிவித்ததால் பொதுமக்கள் மற்றும் எதிர்கட்சிகள் என பல்வேறு தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.