1½ வருடத்திற்கு முன்பு மாயமான இளம்பெண் எலும்புக்கூடாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடுத்துள்ள அரியூர்நாடு ஊராட்சி பரவாத்தம்பட்டயில் பங்காரு என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவருக்கு அன்னக்கிளி என்ற மனைவியும் ரேணுகா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன் வீட்டில் இருந்த ரேணுகா திடீரென மாயமாகியுள்ளார். இதுகுறித்து அவரது பெற்றோர் வாழவந்தி நாடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ரேணுகாவை தேடி வந்துள்ளனர்.
இந்நிலையில் பங்காரு விவசாய நிலத்திற்கு அருகே உள்ள புதரில் ஒரு மனித எலும்புக்கூடு கிடந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்து உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து விரைந்து சென்ற வழவந்திநாடு காவல்துறையினர் எலும்புக்கூடை பார்வையிட்டு விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அங்கிருந்த பங்காரு மற்றும் அவரது மனைவி அந்த எலும்புக்கூடு அருகே கிடந்த உடை மற்றும் பொருட்களை பார்த்து அது காணாமல் போன அவரது மகள் ரேணுகா என கூறியுள்ளனர்.
இதனையடுத்து காவல்துறையினர் அந்த எலும்புகூடை மீட்டு சோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து ரேணுகா தற்கொலை செய்துகொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என அவரது உயிரிழப்பு குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் 1½ ஆண்டுக்கு முன் மாயமான ரேணுகா எலும்புக்கூடாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.