சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தால் கைதிகள் தப்பிச் சென்றதுடன் கொலை, கொள்ளை கும்பல் தலைவரான அர்னல் ஜோசப் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.
கரீபியன் கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடுகளில் ஒன்று ஹைதி ஆகும், போர்ட்- அவ்- ப்ரின்சின் என்பது ஹைதியின் தலைநகராகும். அங்கு க்ரோஸ்-டிஸ்-பவ்க்யுட்ஸ் என்ற சிவில் சிறைச்சாலை உள்ளது. அதில் கொலை கொள்ளை உள்ளிட்ட வழக்குகளின் குற்றவாளிகள் அங்கு அடைத்து வைக்கப்படுகின்றனர். இந்நிலையில் அச்சிறைசாலையில் கடந்த வியாழக்கிழமை அன்று கலவரம் ஏற்பட்டது.
கலவரத்தில் கைதிகளுக்கும் சிறை காவலர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கலவரத்தை நிறுத்த எவ்வளவோ முயற்சி செய்தும் சிறைக்காவலர்களால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. கலவரத்தின்போது கொலை, கொள்ளை கூட்டத்தின் தலைவரான ஜோசப் தப்பி சென்றுள்ளார்.
தப்பி ஓடிய குற்றவாளி எல்ஸ்ட்ரி நகரிலுள்ள அர்டிபொநைட் பகுதியில் உள்ள சோதனைச் சாவடியை கடக்கும் போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அர்னல் ஜோசப்பை சுட்டுக்கொன்றார். கலவரத்தில் 400க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் தப்பிச் சென்றுள்ளனர் மற்றும் சிறை காவலர்கள் உட்பட மொத்தம் 25 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் தப்பி ஓடிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர் என்றும் ஹைதி அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.