பல லட்ச ரூபாய் மோசடி செய்த வேளாண் விரிவாக்க மைய இளநிலை உதவியாளரை போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள தா.குளியநூர் கிராமத்தில் நிர்மலா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் நிர்மலா பட்டதாரியான தனது மகனுக்கு வேலை தேடிய போது தர்மபுரி வேளாண் விரிவாக்கம் மையத்தில் இளநிலை உதவியாளராக வேலை பார்க்கும் ஆறுமுகம் என்பவர் நிர்மலாவுக்கு அறிமுகமானார். அப்போது ஆறுமுகத்தின் ஆசை வார்த்தைகளை நம்பி நிர்மலா தனது மகனுக்கு ஹைகோர்ட்டில் இளநிலை உதவியாளர் பணி வாங்கி கொடுப்பதற்காக 3 தவணைகளாக 9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார். ஆனால் கூறியபடி ஆறுமுகம் வேலை வாங்கி கொடுக்கவில்லை.
இதுகுறித்து கேட்ட போது ஆறுமுகம் பணத்தை திருப்பி தராமல் நிர்மலாவுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து நிர்மலா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த போலீசார் தலைமறைவாக இருந்த ஆறுமுகத்தை நேற்று கைது செய்தனர். மேலும் ஆறுமுகம் ஒரு அதிகாரியிடம் 70 லட்ச ரூபாய் மற்றும் குண்டல்பட்டியில் வசிக்கும் வேறு ஒருவரிடம் 15 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக புகார்கள் வந்தது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.