திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “திருவாரூர் மாவட்டத்தில் ஆன்லைன் மூலம் அமைப்புசாரா தொழிலாளர்கள் பதிவு நடைபெறுகிறது. இந்த தரவு தளத்தில் வீட்டு பணியாளர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், குத்தகைதாரர்கள், விவசாய தொழிலாளர்கள், மர ஆலை தொழிலாளர்கள், கல் குவாரி தொழிலாளர்கள், பேக்கிங் செய்வோர், தச்ச வேலை செய்வோர், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களின் பதிவுகள் நடைபெற்று வருகிறது.
இந்த பதிவினை மேற்கொள்ள வங்கி கணக்கு புத்தகம், தொழிலாளியின் கைபேசி, ஆதார் அடையாள அட்டை ஆகியவற்றை கொண்டு பதிவு செய்து கொள்ள முடியும். மேலும் தொழிலாளியின் வயது கண்டிப்பாக 16 முதல் 59 வயதிற்குள் இருக்க வேண்டும். ஆனால் வருமான வரி செலுத்துபவர்கள் இந்த பதிவினை மேற்கொள்ள முடியாது. அதே சமயம் ஆண்ட்ராய்டு மொபைல் வைத்திருப்பவர்கள் அவர்களே நேரடியாக பதிவு செய்து கொள்ளலாம் அல்லது அருகில் உள்ள மாநில அல்லது மத்திய அரசின் பொதுசேவை மையம் மூலமாக பதிவு செய்ய முடியும்.
அதேபோல் தொழில்துறை அலுவலகத்திற்கு சென்றும் பதிவு செய்து கொள்ள முடியும். இதற்கான பதிவு முற்றிலும் இலவசம். இந்த பதிவினை மேற்கொள்வதன் மூலம் விபத்து காப்பீடு ரூ. 2 லட்சம் வரை கிடைக்கும். அதோடு மட்டுமில்லாமல் அரசே இந்த பதிவில் விபத்துக் காப்பீட்டுக்கான முதல் ஆண்டு சந்தா தொகையை செலுத்துகிறது. எனவே அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களும் பதிவு செய்து பயன்பெற முடியும்” என்று கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறியுள்ளார்.