நம்ம ஊரு திருவிழா எனும் பாரம்பரிய கலாச்சார திருவிழாவானது நாளை நடக்க உள்ளது.
தமிழக அரசு 2021-2022 ஆம் நிதியாண்டில் தமிழகத்தினை சார்ந்த பாரம்பரியக் கலைகளின் சிறப்பினை வெளிப்படுத்தும் வகையில், திரளான கலைஞர்கள் பங்குபெறும் பிரம்மாண்ட நாட்டுப்புறக் கலைவிழாவினை, சென்னையில் ஆண்டுதோறும் நடத்துவதற்கான அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, தமிழகத்தின் பண்பாட்டுக் கூறுகளை உணர்த்தும் நம் மண்ணின் நாட்டுப்புறக் கலை வடிவங்களைக் காட்சிப்படுத்துகிற விழாவினை மார்ச் 21 அன்று மாலை 6.00 மணிக்கு சென்னை தீவுத்திடலில் நடத்தத் திட்டமிட்டுள்ளது.
மேலும் இது குறித்து தலைமை செயலகம் நாமக்கல் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், தமிழ்ப் பண்பாடு மற்றும் தொழில் துறை அமைச்சரான தங்கம் தென்னரசு ஆகியோர் நம்ம ஊரு திருவிழா எனும் நிகழ்வு குறித்து பேசியுள்ளனர். அதில் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது, இந்நிகழ்வில் தமிழகம் முழுவதும் 1000 கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர்.
மேலும் 75-வது சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவை கொண்டாடும் வகையில் நாட்டுப்புற கலைகள் தொடர்பாக 75 ஒளிப்படங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து பாரம்பரிய கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பதற்கான மேடையாக இருப்பதே இந்நிகழ்வின் முக்கிய நோக்கமாக உள்ளது. மேலும் ஆண்டுதோறும் இதுபோன்ற திருவிழா நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.