தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற ‘விக்ரம் வேதா’ படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிக்கவுள்ள நடிகர்கள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் பிரபல நடிகர்கள் மாதவன் , விஜய் சேதுபதியின் அசத்தலான நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘விக்ரம் வேதா’. இயக்குனர்கள் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. இந்தப் படத்தின் மூலம் தான் நடிகர் விஜய்சேதுபதி திரையுலக வாழ்வில் மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்தார். இதையடுத்து இந்த படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியானது. தமிழில் இந்தப் படத்தை இயக்கிய புஷ்கர் காயத்ரி ஹிந்தியிலும் இயக்கவுள்ளனர் . மேலும் சமீபத்தில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் , நடிகைகள் குறித்த தேர்வுகள் நடைபெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் மாதவன் நடித்த போலீஸ் கதாபாத்திரத்தில் நடிகர் சயிப் அலி கான் நடிக்கயிருப்பதாகவும், நடிகர் விஜய் சேதுபதி நடித்த கேங்க்ஸ்டர் கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷன் நடிக்கயிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது . இதையடுத்து ஸ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி , கதிர் உள்பட மற்ற கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ள நடிகர்கள், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.