தாமிரபரணி ஆற்றின் ஓரம் அமைந்துள்ள ஸ்ரீ வைகுண்டம் சட்டமன்ற தொகுதி முழுக்க விவசாயம் சார்ந்த பகுதி ஆகும். நவ திருப்பதி பெருமாள் கோவில்கள், நவகைலாய கோவில்களில் ஒன்றான கைலாசநாதர் சிவன் கோவில் ஆகிய ஆன்மீக தலங்களும் இங்கு உள்ளன. ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் காங்கிரஸ் 7 முறை வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 5 முறையும், திமுக 3 முறையும் தொகுதியை கைப்பற்றி உள்ளனர்.
தற்போது அதிமுகவின் எஸ்.பி. சண்முகநாதன் எம்எல்ஏவாக உள்ளார்.ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,23,764 ஆகும். வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான தொழிற்சாலைகள் உருவாக்கப்பட வேண்டும் என்பது தொகுதி மக்களின் கோரிக்கையாகும். தாலுகாவாக தரம் உயர்த்தப்பட்ட ஏரல் பகுதியில் அரசு கல்லூரி அமைக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
ஸ்ரீவைகுண்டம் பகுதியில் வாரச்சந்தை தொடங்கபடும் என முதலமைச்சர் அறிவித்து ஓராண்டு ஆகிய நிலையில் ஆரம்பகட்ட பணிகள் கூட நடைபெறாதது அதிருப்தியை உருவாக்கியுள்ளது. தாமிரபரணி ஆற்றில் உள்ள மருதூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணையை தூர்வார வேண்டும் என்பது விவசாயிகளின் வேண்டுகோளாக உள்ளது. தாமிரபரணி ஆற்றின் கரையில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் குற்றம்சாட்டுகின்றனர். ஸ்ரீவைகுண்டம் அணையில் படகு குளாம் அமைத்து சுற்றுலா தலமாக மேம்படுத்த வேண்டும் என்றும் மக்களின் வலியுறுத்துகின்றனர்.
விவசாயத்தை நம்பியுள்ள சாத்தான்குளம் பகுதியில் நீர் ஆதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. சாத்தன் குளம் தொகுதி பிரிக்கப்பட்டு ஸ்ரீவைகுண்டம் மற்றும் திருச்செந்தூர் தொகுதிகளோடு இணைக்கபட்டதால் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றசாட்டு உள்ளது. வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்துவதுடன் தாமிரபரணி ஆற்றில் நடைபெறும் மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் என்பதும் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.