இஸ்லாமியர் என்பதால் பிரபல பரதநாட்டிய கலைஞர் ஜாகிர் உசேன் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்து வெளியேற்றப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பரதநாட்டிய கலைஞர் ஜாகிர் உசேன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்ததாவது: “ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் அனுமதிக்காமல் தடுத்ததால் பெரும் அதிருப்தி ஏற்பட்டு இருக்கிறது. நான் எட்டு வயதில் இருந்து திருச்சி உள்ளிட்ட பல கோயில்களுக்கு சென்று இருக்கிறேன். பரதநாட்டியம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று உள்ளேன். ஆனால் முதல் முறையாக மதத்தின் அடிப்படையில் என்னை தடுத்து நிறுத்தியது மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
என்னைத் தடுத்து நிறுத்திய நபர் இதனை திட்டம்போட்டு செய்துள்ளார். ஆனால் நிர்வாகிகள் யாரும் என்னை தடுக்கவில்லை. முறைப்படி புகார் அளித்துள்ளேன். கடவுளை நம்புகிறவர்கள் யாராக இருந்தாலும் கோயிலுக்குள் அனுமதிக்கலாம். இதுவரை அப்படித்தான் நடந்துள்ளது. முதல்முறையாக இப்படி நடந்து இருப்பது எனக்கு மிகுந்த மன வேதனையை தருகிறது” என தெரிவித்திருந்தார். இது தொடர்பாக இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், நடனக் கலைஞர் ஜாகிர் உசேன் வெளியேற்றப்பட்டது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணை முடிவில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.