ஸ்ரீபெரும்புதூர் அருகே பழுதாகி நின்ற கார் மீது லாரி மோதியதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் கோலர் பகுதியை சேர்ந்த 39 வயதான தமிழ்ச்செல்வன், தனியார் நிறுவனதில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் சென்னையிலுள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக அவரது உறவினர்களான பவானி வயது (27 ). அம்பிகா வயது (55) மற்றும் அற்புதம் வயது (46) ஆகியோருடன் கர்நாடகாவிலிருந்து சென்னைக்கு காரில் புறப்பட்டு சென்றனர்.
தமிழ்ச்செல்வன் கார் ஓட்டிக் கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் அருகே வந்து கொண்டிருந்தபோது கார் பழுதாகி பாதி வழியிலேயே நின்று கொண்டிருந்தது. இதனால் தமிழ்ச்செல்வன் காரை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு பழுது பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்கு உதவியாக பவானி காரிலிருந்து இறங்கி அவருக்கு உதவி புரிந்தார்.
அம்பிகா மற்றும் அற்புதம் ஆகிய இருவரும் காரின் உள்ளே அமர்ந்திருந்தனர். இந்நிலையில் வேலூர் மாவட்டம் வாலாஜா பேட்டையிலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த லாரி யானது திடீரென்று பழுதான காரின் மீது மோதியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே தமிழ்செல்வனும் பவானியும் உடல் நசுங்கி உயிரிழந்தனர். காரின் உள்ளே இருந்த அம்பிகாவும் அற்புதமும் லேசான காயங்களுடன் உயிர் பிழைத்தனர்.
இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் மற்றும் அவருடன் பணியில் இருந்த போலீசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் இறந்த தமிழ்செல்வன் மற்றும் பவானி ஆகியோரின் உடலை எடுத்துக்கொண்டு உடற்கூறு ஆய்வுக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.