டெல்லியில் இருந்து அசாம் மாநிலம் கவுகாத்திக்கு பாஜகவை சேர்ந்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி விமானம் மூலம் சென்றுள்ளார். அதே விமானத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மகளிரணி தலைவி நெட்டா டிசோசோவும் பயணித்துள்ளார். இதையடுத்து விமானம் கவுகாத்தி வந்து சேர்ந்ததும் பயணிகள் கீழே இறங்க தொடங்கினர். அப்போது அமைச்சர் ஸ்மிருதி இரானியை கவனித்த டிசோசா அவரிடம் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு அமைச்சர் ஸ்மிருதி இரானி, பயணிகள் விமானத்தில் இருந்து இறங்குவதை தடுக்க வேண்டாம். இறங்கிய பிறகு நான் பதில் கூறுகிறேன் என்று கூறியுள்ளார்.
ஆனால் டிசோசோ, பெட்ரோல், டீசல் விலை உயர்வால் நாட்டில் உள்ள அனைத்து மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார். அதற்கு பதிலடி கொடுத்த ஸ்மிருதி இரானி, தவறான தகவல்களை நீங்கள் பரப்புகிறீர்கள். ஏழைகளின் நலனுக்காக மத்திய அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இலவசமாக தடுப்பூசி, எரிவாயு இணைப்பு, உணவு பொருள்கள் ஆகிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்று தெரிவித்துள்ளார். இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.