Categories
மாநில செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படுமா?… வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு…!!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்புடைய வழக்கில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

தூத்துக்குடியில் இருக்கின்ற ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளிவரும் நச்சுப் புகையால் பொதுமக்களுக்கு பல்வேறு நோய்கள் பரவுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதனால் கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி பொது மக்கள் அனைவரும் ஒன்றுகூடி மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினர். அந்தப் போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில், காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதனைத்தொடர்ந்து அதே ஆண்டு மே மாதம் 28ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு சீல் வைத்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வேதாந்தா நிறுவனம், மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. ஆனால் தமிழக அரசு எடுத்த முடிவு சரிதான் என்றும், ஆலையில் இருந்து வெளியேறக்கூடிய நச்சுப் புகையால் பொதுமக்களுக்கு நோய்கள் வருவதாகவும், அதனால் அந்த ஆலையை திறக்கக்கூடாது என சென்னை ஐகோர்ட்டில் தூத்துக்குடியை சேர்ந்த பல்வேறு தரப்பினரும் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இந்த வழக்குகளை விசாரணை செய்ய நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் உள்ளடக்கிய சிறப்பு அமர்வினை சென்னை உயர் நீதிமன்றம் அமைத்தது. கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம் தேதி முதல் சிறப்பு அமர்வில் இந்த வழக்கு விசாரணை தொடங்கியுள்ளது. தொடர்ந்து 39 நாட்கள் விசாரணைக்கு பின்னர், 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் தேதி இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் கடந்த 18ம் தேதி காணொலிக் காட்சி மூலமாக பிறப்பித்துள்ளனர்.

அந்த தீர்ப்பில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும் என்றும் அது தொடர்பாக வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்வதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறது. இதற்கு முன்னதாகவே தமிழக அரசு, மதிமுக, மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |