ஸ்டாமிங் ஆபரேஷன்’ மூலம் தமிழகம் முழுவதும் 52 மணி நேரத்தில் 3,325 ரவுடிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்..
தமிழகத்தில் நடைபெறும் குற்றங்களை குறைக்கவும், கொடூர குற்றங்களில் ஈடுபடுபவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்ற குற்ற தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் பேரில், கடந்த இரண்டு நாட்களாக அதிரடி கைது நடவடிக்கை, மேற்கொள்ளப்பட்டு வருகிறது.. சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள், மாநகரங்களில் ரவுடிகளின் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது..
இந்தசோதனையில் 36 மணி நேரத்தில் 2,512 பேர் கைது செய்யப்பட்டனர்.. கைது செய்யப்பட்ட ரவுடிகளிடமிருந்து 5 துப்பாக்கிகள், 934 அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. போலீஸ் தேடுதல் வேட்டையில் பிடிபட்ட சிறு சிறு குற்ற செயல்களில் ஈடுபட்ட 1,927 பேரிடம் நன்னடத்தை பிணை பத்திரம் எழுதி வாங்கி விட்டு எச்சரித்து விடுவித்துள்ளார்கள்..
மேலும் கைது செய்யப்பட்ட 733 பேர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். டிஜிபி சைலேந்திரபாபு குற்றச்செயல்களை தடுப்பதற்கான காவல்துறையின் அதிரடி நடவடிக்கை தொடரும் என்று தெரிவித்தார்.. அதனடிப்படையில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் ரவுடிகளை கண்காணித்து கைது செய்யும் ‘ஸ்டாமிங் ஆபரேஷன்’ மூலம் தமிழகம் முழுவதும் 52 மணி நேரத்தில் மொத்தமாக 3,325 ரவுடிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.. இதில் 972 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், 1,117 ஆயுதங்கள், 7 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.. இந்த அதிரடி ஆபரேஷன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது..