ஸ்கூட்டரில் வைத்திருந்த பணத்தை திருடிய மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சீர்காழி வைதீஸ்வரன் கோவில் விளக்கு முகத் தெருவில் விவசாயியான ராஜதுரை என்பவர் வசித்து வருகிறார். இவர் வைத்தீஸ்வரர் கோவில் கீழவீதியிலுள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியிலிருந்து ரூ.1 லட்சத்தை எடுத்துவிட்டு, அதனை தனது ஸ்கூட்டரின் இருக்கைக்கு அடியில் வைத்துள்ளார். அதன்பின் கைப்பேசிக்கு ரீ-சார்ஜ் செய்வதற்காக கடைக்கு சென்றுள்ளார்.
இதனையடுத்து ராஜதுரை திரும்பிவந்து பார்த்தபோது அவரது ஸ்கூட்டரிலிருந்த ரூ.1 லட்சம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அந்த பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து ராஜதுரை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.