அப்தாப் அமின் பூனவாலா (28) என்பவா் ஷ்ரத்தா வாக்கா் என்பவரை கழுத்தை நெரித்து கொலை செய்ததாகவும், அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டி தெற்கு தில்லி மெஹரோலியிலுள்ள தன் வீட்டில் 3 வாரங்களாக குளிா் சாதன பெட்டியில் வைத்து இருந்ததாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அத்துடன் அப்தாப் அந்த உடலின் பாகங்களை நகரின் பல இடங்களிலும் வீசியதும் காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. திருமணம் செய்யாமலேயே இரண்டு பேரும் சேர்ந்து வாழ்ந்து வந்த சூழ்நிலையில் ஷ்ரத்தாவை, அப்தாப் கொலை செய்துள்ளார்.
சண்டையின் போது ஏற்பட்ட கோபத்தில் அவரை கொலை செய்துவிட்டதாக நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தியபோது அப்தாப் கூறியிருந்தார். இதனிடையில் சென்ற 2020ம் வருடத்தில் ஷ்ரத்தா அளித்த புகாரில், “அப்தாப் தன்னை அடித்து கொலை செய்ய முயன்றதாகவும், என்னைக் கொன்று துண்டுத்துண்டாக வெட்டி வீசிவிடுவேன் என்று மிரட்டுவதாகவும் போலீஸ் நிலையம் சென்று தன் கைப்பட எழுதி புகார் ஒன்றைப் பதிவு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் தன்னை அப்தாப் கொல்ல நினைப்பது அவரது குடும்பத்தினருக்கும் நன்றாக தெரியும். இதனால் அப்தாப் குடும்பத்தினர் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என கூறப்படுகிறது. அப்தாப்புக்கு நேற்று உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டதாகவும், அதன் முழு அறிக்கை இந்த வாரத்துக்குள் காவல்துறையிடம் அளிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.