Categories
தேசிய செய்திகள்

வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றது ஏன் தெரியுமா?…. சரத் பாவார் அதிரடி பேட்டி….!!

பாஜக தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து 2-ஆவது முறையாக ஆட்சி பொறுப்பேற்றது. பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக தொடர்ந்த நிலையில் மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் போராட்டம் நடத்தினர். ஒரு ஆண்டுக்கு மேலாக நடந்த இந்த போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக சொல்லப்படுகின்றது.

இதனையடுத்து கடந்த 19 தேதி 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். வரும் பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரில் இந்த வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என்று அறிவித்தார். ஆனால் ஒரு சில விவசாய அமைப்புகள் நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு வாபஸ் பெற்றால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பாவார் நேற்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது, “உத்தரப் பிரதேச மாநிலம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களுக்கு பாஜகவினர் செல்லும்போது அதில் முக்கியமாக கிராமப்பகுதிகளில் அவர்களுக்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை. எனவே வாக்கு கேட்டு செல்லும்போது இந்த நிலைதான் இருக்கும் என்று பாஜகவினர் உணர்ந்துவிட்டனர். இதனால்தான் வேளாண் சட்டங்கள் திரும்ப பெற முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.

Categories

Tech |