பாஜக தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து 2-ஆவது முறையாக ஆட்சி பொறுப்பேற்றது. பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக தொடர்ந்த நிலையில் மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
ஒரு ஆண்டுக்கு மேலாக நடந்த இந்த போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக சொல்லப்படுகின்றது. இதனையடுத்து கடந்து 19 ஆம் தேதி பிரதமர் மோடி 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுவதாக அறிவித்தார். வரும் பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரில் இந்த வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்காக சட்ட மசோதா உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் டெல்லியில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வேளாண் சட்டம் ரத்து செய்யப்படுவதற்கான மசோதா பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆலோசனை முடிவில் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் நவம்பர் 29ம் தேதியில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கும். அந்தக் கூட்டத்தில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதற்கான மசோதா தாக்கல் செய்யப்படும்.