வேலை வாங்கி தருவதாக கூறி வாலிபரிடம் 2 லட்ச ரூபாய் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆ. குன்னத்தூர் பகுதியில் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜாவுக்கு உதயகுமார் என்பவர் அறிமுகமானார். இந்நிலையில் பணம் கொடுத்தால் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக உதயகுமார் கூறியதை நம்பி ராஜா 2 லட்ச ரூபாயை கொடுத்துள்ளார். ஆனால் உதயகுமார் கூறியபடி வேலை வாங்கி கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். பலமுறை பணத்தை திரும்ப கேட்டும் உதயகுமார் உரிய பதில் அளிக்கவில்லை.
மேலும் உதயகுமார், அவரது மனைவி மகாலட்சுமி, உறவினர்கள் முனுசாமி, வெங்கடேசன் ஆகியோர் ராஜாவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ராஜா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் உதயகுமார் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். நேற்று தலைமறைவாக இருந்த உதயகுமாரை போலீசார் கைது செய்தனர். மற்ற 3 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.