தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தபடாமல் இருந்தது. அதனால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி தவித்து வந்தனர். தற்போது பாதிப்பு குறைந்துள்ள நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று (ஜூலை 2) திருப்பூர் மாவட்டத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் இன்று திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழி காட்டு மையம், மகளிர் திட்ட அலுவலகம் சார்பாக தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் 200 க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்தவர்கள், கணினி பயிற்றுநர்கள்,ஓட்டுநர்கள் மற்றும் தையல் உள்ளிட்ட தொழிற்கல்வி அறிந்தவர்கள் அனைவரும் இந்த முகாமில் பங்கேற்கலாம். இதில் விருப்பம் உள்ளவர்கள் முதலில் அதற்கான இணைய தளத்தில் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.