வாலிபர் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தச்சநல்லூர் பால்கட்டளை பகுதியில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பேச்சிராஜா(26) என்ற மகன் இருந்துள்ளார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு தங்கமாரி என்ற மனைவியும், மூன்று மாத கைக்குழந்தையும் இருக்கின்றனர். நேற்று காலை அதே பகுதியில் வசிக்கும் ஒரு வாலிபருடன் பேச்சிராஜா மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் நெல்லை- மதுரை பைபாஸ் சாலையில் சாய்பாபா கோவில் அருகே சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் பேச்சிராஜாவை அரிவாளால் வெட்ட முயன்றனர். இதனால் பேச்சிராஜா அங்கிருந்து தப்பி ஓடினார். ஆனாலும் மர்ம நபர்கள் அவரை ஓட ஓட விரட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து அறிந்த பேச்சிராஜாவின் குடும்பத்தினர் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சிராஜாவின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். பின்னர் வாலிபரின் உடல் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் முன்விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் அரங்கேறியதா உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.