வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் பஸ் டிரைவரை தாக்கிய 2 பேரை கைது செய்ய கோரி அரசு பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் பஸ்சை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
செல்வம் என்பவர் அரசு பஸ் டிரைவர். இவர் அம்பத்தூரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு வேலூர் பஸ் நிலையத்திற்கு உள்ளே வரும் பொழுது பேருந்துகள் வரிசையாக நின்றதால் உள்ளே செல்வதற்காக ஹார்ன் அடித்துள்ளார். இதற்கு பஸ் நிலையத்திற்கு வெளியே உள்ள குளிர்பானங்கள் விற்கும் கடையில் பணிபுரியும் 2 தொழிலாளர்கள் எதிர்த்தது மட்டுமல்லாமல் ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.
இதை தொடர்ந்து பேருந்து நிலையத்திற்கு உள்ளே செல்ல மீண்டும் ஹொரணை அழுத்தியவாறே செல்வம் சென்றார். பேருந்தை நிறுத்திவிட்டு செல்வம் கீழே இறங்கியபோது ஆத்திரமடைந்த இருவரும் செல்வத்தை திட்டியும் தாக்கியும் உள்ளனர். மேலும் இவர்கள் இருவரும் செல்வத்தின் தலைமேல் கையிலிருந்த சாவியால் தாக்கியதால் பலத்த காயமடைந்த செல்வத்திற்கு தலையிலிருந்து ரத்தம் வந்தது. இதையடுத்து தாக்கிய இருவரையும் மடக்கிப் பிடிக்க முயன்ற போது இருவரும் தப்பி ஓடிவிட்டனர்.
இந்தச் செய்தி காட்டுத் தீயாக பரவ அரசு பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் இருவரையும் கைது செய்யம் வரை பேருந்துகளை ஓட்ட மாட்டோம் என பேருந்திலிருந்து இறங்கி விட்டனர். இதனால் அங்கு எந்த பேருந்துகளும் இயக்கப்படாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த போக்குவரத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்கள் இருவரையும் கைது செய்வதாக கூறிநார். அதைத் தொடர்ந்து பஸ்களை இயக்க ஆரம்பித்தனர். இதையடுத்து காயமடைந்த செல்வத்தை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். போலீசார் 2 பேர் மீது வழக்குப் பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.