வெங்கட் பிரபு, ரத்னகுமார், சந்தோஷ் நாராயணன் ஆகியோர் டாக்டர் படத்தை பாராட்டி பதிவிட்டுள்ளனர்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர். நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் பிரியங்கா மோகன், வினய், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம், எஸ்.கே புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். அக்டோபர் 9-ஆம் தேதி இந்த படம் தியேட்டர்களில் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் டாக்டர் படம் பார்த்த திரையுலக பிரபலங்கள் பலரும் தங்கள் சமூக வலைதளப் பக்கத்தில் படக்குழுவினரை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் இயக்குனர் வெங்கட் பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில், ‘குடும்பத்துடன் டாக்டர் படத்தை பார்த்து ரசித்தேன். என்ன ஒரு ஜாலியான பயணம். சிவகார்த்திகேயன் செம்ம சார். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்’ என பதிவிட்டுள்ளார். மேயாத மான், ஆடை போன்ற படங்களை இயக்கிய ரத்னகுமார் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘நெல்சன் அண்ணா வேற மாறி சம்பவம். 10 செகண்ட் ப்ரோமோ பார்த்து ஒரு செகண்ட் யோசிச்சவங்கள எல்லாம் அடிச்சி ஓட விட்டுருக்கீங்க. மனமார்ந்த வாழ்த்துக்கள்’ என பதிவிட்டுள்ளார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், ‘டாக்டர் படம் பார்த்தேன். நெல்சன் திலீப்குமார், சிவகார்த்திகேயன், அனிருத் மற்றும் அற்புதமான அனுபவத்தை கொடுத்த மொத்த படக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள்’ என தெரிவித்துள்ளார்.