கொரோனா தடுப்பு குறித்து கம்பத்தில் பொதுமக்களுக்கு முககவசம் கொடுத்து போக்குவரத்து காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கொரோனா 2-வது அலை தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. அதனை தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதற்கிடையே சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் இணைந்து காவல்துறையினர் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதன்படி கொரோனா தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கம்பம் போக்குவரத்து காவல்துறையினர் சார்பில் கம்பம் போக்குவரத்து சிக்னல் அருகில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
அதற்கு உத்தமபாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு சின்னகண்ணு என்பவர் தலைமை தாங்கினார். அந்த நிகழ்ச்சியில் கொரானா வைரஸ் தொற்றிலிருந்து தங்களை பாதுகாப்பது குறித்தும், சமூக இடைவெளி, முகக்கவசம், கைகளை சுத்தம் செய்தல் குறித்தும் பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து முக கவசம், கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. அதேபோல் பேருந்து, கார், மோட்டார் சைக்கிள் மற்றும் பாதசாரிகளுக்கு கம்பம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில் முகக்கவசம் வழங்கப்பட்டது.