தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஏழை குடும்பங்களுக்கு உடனடி நிவாரணமாக 10,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் திரு. சந்திரசேகரராவ் அறிவித்துள்ளார்.
தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் ஹைதராபாத்தில் பெரும்பாலான சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் வெள்ளம் புகுந்துள்ளதால் ஏராளமான வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. மழை வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக மாநிலத்தில் இதுவரை 70 பேர் பலியாகி உள்ளனர்.
இந்நிலையயில் மழை பாதிப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் திரு. சந்திரசேகரராவ் ஹைதராபாத்தில் நூறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்து உள்ளதாகவும். ஹைதராபாத் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாக 10,000 ரூபாயும் வழங்கப்படும் எனவும் அறிவித்தார். மேலும் முழுவதும் சேதம் அடைந்த வீட்டிற்கு தலா 1 லட்சம் ரூபாயும் பகுதி அளவு சேதமடைந்த வீட்டிற்கு 50,000 ரூபாயும் வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் திரு. சந்திரசேகரராவ் அறிவித்துள்ளார்.