பாகிஸ்தானில் பருவ மழை பெய்து வருவதால் பயிரிடப்பட்ட பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி வீணாகியுள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் நாட்டின் பல்வேறு நகரங்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளது. இந்நிலையில் ஒட்டு மொத்த நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு தண்ணீரில் மூழ்கியுள்ளதாக பாகிஸ்தான் பருவநிலை மாற்றம் மந்திரி தெரிவித்துள்ளார். மேலும் இந்த வெள்ளத்தால் 1200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து 6000-க்கும் அதிகமானோர் காயம் அடைந்ததாகவும், நாடு முழுவதும் 3 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 10. 57 வீடுகள் சேதம் அடைந்துள்ளதாகவும் பாகிஸ்தான் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் இந்த வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சிந்து மாகாணத்தை சேர்ந்த விவசாயி அஷ்ரப் அலி பான்ப்ரா என்பவர் கூறியதாவது “நாங்கள் இந்த வெள்ளத்தால் 50 ஆண்டுகள் பின்னோக்கி சென்று விட்டோம். முன்னதாக ஒரு காலத்தில் 72 மணி நேரம் தொடர் மழை பெய்தது. இதனால் பெரும் சேதம் ஏற்பட்டது. தற்போது 2 ஆயிரத்து 500 ஏக்கர் பருத்தி மற்றும் கரும்புகள் அறுவடை செய்ய தயார் நிலையில் இருந்தது. ஆனால் இந்த மழை வெள்ளத்தில் அனைத்தும் அழிந்து விட்டது. இதனால் நாங்கள் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை வாங்க செலவு செய்த 270 மில்லியன் தொகையை இழந்துள்ளோம். எங்களுக்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ளது. அதற்குள் தண்ணீர் வெளியேற்றப்படாவிட்டால் எங்களால் கோதுமையை பயிரிட முடியாது. இதனால் உணவை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படும்” என கூறியுள்ளார்.