வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி பல பேரிடமிருந்து லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர், மதுரை மற்றும் ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பல பேர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனுவை கொடுத்திருந்தனர். அதில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வடவள்ளி மருதமலை ரோட்டில் ஒரு தனியார் நிறுவனம் அமைந்துள்ளது. இது வெளிநாட்டிற்கு ஆட்களை அனுப்பும் ஏஜென்சி நிறுவனமாக செயல்பட்டு வந்துள்ளது. இந்த நிறுவனம் சிங்கப்பூருக்கு வேலைக்கு ஆட்களை எடுப்பதாக மே மாதம் 22-ஆம் தேதி மற்றும் 29-ஆம் தேதி அறிவித்துள்ளது. இந்த நிறுவனத்தின் செல்போன் நம்பரை தொடர்பு கொண்டு பேசிய போது சிவில் இன்ஜினியர், சூப்பர்வைசர் மற்றும் பிட்டர் உள்ளிட்ட வேலைகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதாகவும், மாதம் ரூபாய் 3 லட்சம் வரை சம்பளம் கிடைக்கும் எனவும் கூறியுள்ளனர். இதனையடுத்து பாஸ்போர்ட் மற்றும் விசா உள்ளிட்டவைகளுக்கு அலுவலகத்தில் பணம் கட்ட வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.
இதை நம்பி 170 பேர் தனியார் நிறுவனத்தில் பணத்தை கட்டி உள்ளனர். இவர்கள் 1 லட்சம் முதல் 2 லட்ச ரூபாய் வரை பணத்தை கட்டியுள்ளனர். இந்நிலையில் திடீரென தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் ராமமூர்த்தி மற்றும் அதிகாரி மோகனகிருஷ்ணன், ஊழியர்கள் சரண்யா, ஜோதி ஆகியோர் நிறுவனத்தை மூடிவிட்டு பணத்தை சுருட்டி கொண்டு தலைமறைவாகி விட்டனர். இவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து பணத்தை திருப்பி தருமாறு புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தது. அந்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் மோகன கிருஷ்ணன் என்பவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் இருந்து ஒரு சொகுசு கார் மற்றும் 21 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் தலைமுறைவாக இருக்கும் மற்ற நபர்களையும் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.