தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்து தற்போது வாக்கு எண்ணிக்கை பணி நடந்து வருகிறது. இதில் பெரும்பான்மையான இடங்களை திமுகவே வென்றுள்ளது. அதிமுக சார்பில், உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் விதிமீறல்கள் நடந்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக வழக்கறிஞர் அணி இணை செயலாளர் பாபு முருகவேல் நேற்று சென்னை கோயம்பேட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் புகார் மனுவை கொடுத்துள்ளார்.
இதன் பின் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “அதிமுக முகவர்கள் யாரையும் வாக்கு எண்ணும் மையங்களில் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. மேலும் பெரும்பாலான இடங்களில் 8 மணி ஆகியும் அவர்கள் வாக்கு எண்ணிக்கையை தொடங்கவில்லை. இதனை அடுத்து உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள அதிமுகவினருக்கு சான்றிதழ் இன்னும் வழங்கப்படவில்லை” என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.