பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கங்கனா ரனாவத். இவர் நடிக்கும் திரைப்படங்கள் பொதுவாக நல்ல வசூல் பெறும். அதுமட்டுமல்லாமல் இவர் நடிக்கும் திரைப்படங்கள் அனைத்தும் அவரின் நடிப்பு பற்றி பரவலாகப் பாராட்டப்படும். இதன் காரணமாகவே கங்கனா ரனாவத் கதையில் தனக்கு அதிக முக்கியம் உள்ள திரைப்படங்களையே தேர்வுசெய்து நடித்து வருகிறார். இந்த நிலையில் கங்கனா ரனாவத் நடிப்பில் மே 20 ஆம் தேதி “தாக்கட்” படம் வெளியாகியுள்ளது. இப்படம் 100 கோடி ரூபாய் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த படமாக “தாக்கட்” உருவாக்கப்பட்டு உள்ளது.
இந்த படத்தை ரேனிஷ் காய் இயக்கியிருக்கிறார். இத்திரைப்படம் வெளியாகி அதிக வரவேற்பைப் பெறும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் இப்படம் வெளியான முதல் நாளிலிருந்தே குறைவான வசூலையே பெற்று வருகிறது. அத்துடன் இப்படம் வெளியாகி 8 நாட்கள் ஆகியும் இப்போது வரை ரூபாய் 3.5 கோடி வரை மட்டுமே வசூலாகி உள்ளது. அதிலும் திரைப்படம் வெளியாகிய 8வது நாளில் இந்தியா முழுதும் மொத்தம் 20 டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனையாகி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு தொடர்ந்து திரையரங்கிற்கு ரசிகர்கள் வருகை குறைந்ததை அடுத்துப் பல்வேறு காட்சிகள் ரத்து செய்யப்பட்டு வருகிறது. ரூபாய் 100 கோடியில் தயாரிக்கப்பட்ட இந்த படம் பெரிய வசூல் செய்து கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மோசமான வசூல் சாதனையைப் பெற்று வருவது பாலிவுட்டில் பேசுபொருளாக மாறியுள்ளது.