வெறி நாய் கடித்து குதறியதில் 11 ஆடுகள் குடல் சரிந்த நிலையில் இறந்து கிடந்தது.
திருப்பூர் மாவட்டம், குண்டடத்தை அடுத்துள்ள வெறுவேடம் பாளையம், நந்தவனம் பாளையம் பூசாரி தோட்டத்தில் வசித்த ஒரு விவசாயி வெள்ளாடுகளை வளர்த்து வருகின்றார். இந்த ஆடுகளை தனது தோட்டத்தில் பட்டி அமைத்து வளர்த்து வருகிறார். இந்த ஆடுகளின் மூலம் கிடைக்கும் வருவாயில் பிழைப்பு நடத்தி வருகின்றார். இந்நிலையில் ஆடுகளை தினமும் காலையில் மேய்ச்சலுக்காக ஓட்டி சென்று விட்டு மாலையில் பட்டியில் அடைப்பது வழக்கமான செயல். அதன்படி கடந்த 1-ம் தேதி காலையில் வழக்கம்போல் ஆடுகளை மேய்ப்பதற்கு திறந்துவிட பட்டிக்கு விவசாயி சென்றார். அப்போது பட்டியில் வெறிநாய் கடித்து 6 ஆடுகளும் குடல் சரிந்த நிலையில் இறந்து கிடந்தது.
இதே போன்று அதே பகுதியில் வசித்த நடராஜ் என்பவர் வளர்த்து வந்த ஐந்து ஆடுகளையும் வெறிநாய் கடித்து குதறியதில் இறந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி கால்நடை வளர்ப்பவர்கள் கூறியதாவது, இந்த பகுதியில் கோழி பண்ணை இருக்கின்றது. இந்த கோழி பண்ணையில் இறந்த கோழிகளை கோழிப்பண்ணை உரிமையாளர் பொது இடத்தில் வீசுவதால் அந்த கோழிகளை வெறிநாய்கள் சாப்பிட்டுவிட்டு இதுபோன்ற ஆடுகளை கடித்து குதறும் சம்பவம் அடிக்கடி நிகழ்கிறது. இதனால் பொது இடங்களில் இறந்த கோழிகளை வீசும் கோழிப்பண்ணை உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்கள். மேலும் இறந்த ஆடுகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.