வீட்டுவசதி வாரிய குடியிருப்பு ஒதுக்கீடு பெற்று விற்பனைப் பத்திரம் பெறாதவர்களுக்கு மார்ச் 31ம் தேதி வரை வட்டி தள்ளுபடி சலுகையை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து வீட்டுவசதி வாரியமேலாண் இயக்குநர் வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய திட்டங்களில் குடியிருப்பு ஒதுக்கீடு பெற்றவர்களில் சிலர் வட்டிச்சுமையால் விற்பனை பத்திரம் பெறாமல் உள்ளனர். இவர்களுக்கு மாதத்தவணை செலுத்தத் தவறியதற்கான அபராத வட்டி, முதல் மீதான வட்டி ஆகியவற்றை முழுவதுமாகவும், நிலத்தின் இறுதி விலை வித்தியாசத்தின் மீதான வட்டியில் ஆண்டுக்கு 5 மாத வட்டி மட்டும் கணக்கிட்டு, அவற்றை அரசு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
அரசால் வழங்கப்பட்ட இச்சலுகை வரும் மார்ச் 31-ம் தேதி வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும்.
வட்டி தள்ளுபடி திட்டத்துக்கு தகுதியான ஒதுக்கீட்டுதாரர்களுக்கு ஏற்கெனவே நிலுவைத் தொகைக்கான அறிவிப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எனவே தகுதியான ஒதுக்கீட்டுதாரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி சம்பந்தப்பட்ட அலுவலகங்களை அணுகி தங்கள் ஒதுக்கீட்டுக்கான நிலுவைத் தொகையை ஒரே தவணையில் செலுத்தி விற்பனை பத்திரம் பெற்றுக் கொள்ளலாம். 31.03.2020க்குப் பின்னர் நிலுவைத் தொகையினை செலுத்தும் ஒதுக்கீடுதாரர்களுக்கு, மேற்படி வட்டித் தள்ளுபடி சலுகை கிடைக்கப் பெறாது என்பதால் இந்த அரிய வாய்ப்பினை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.