கூலி வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் போது பள்ளி மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் ஆர்கே பேட்டையை சேர்ந்த நாராயணபுரம் ஊராட்சிக்குட்பட்ட எர்ணாகுளம் கிராமத்தில் வசிப்பவர் சங்கர். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு 12ஆம் வகுப்பு படிக்கும் சந்தோஷ் (17) என்ற மகன் இருக்கிறார். அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பவரின் மகன் சத்யா (14), ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். மேலும் ஐயப்பன் என்பவருடைய மகன் விஜயகுமார்(17) பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் இவர்கள் மூவரும் கூலி வேலை செய்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை கூலி வேலை பார்த்துவிட்டு மதியம் 2 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளனர். அப்போது கிராம சாலை அருகே இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் புதர் படர்ந்து கிடந்த 60 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சத்யா மற்றும் சந்தோஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். விஜயகுமார் மட்டும் இரு சக்கர வாகனத்தில் இருந்து குதித்து விட்டதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார்.
இந்த தகவல் அறிந்த ஆர்கே பேட்டை காவல் ஆய்வாளர் சுரேந்திர குமார், உதவி காவல் ஆய்வாளர் தியாகராஜன், சோளிங்கர் தீயணைப்பு வீரர்கள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்த 2 மாணவர்களின் சடலங்களை மீட்டு உடல் ஆய்வு கூற்றுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பள்ளிகள் மூடப் பட்டிருக்கும் நிலையில், வறுமை வாட்டியதால் ஏழை விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் கூலி வேலை பார்த்து விட்டு வீடு திரும்பும்போது சாலையோரம் இருந்த பாழடைந்த கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.