சென்னை மாவட்டத்தில் பூந்தமல்லி பகுதியில் பாண்டியன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு புவனேஸ்வரி, பரிமளா என்ற இரண்டு மனைவிகள் உள்ளனர். மேலும் அவர்களுக்கு இரு பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று காலை புவனேஸ்வரி வேலைக்கு சென்றுள்ளார். அதன் பின் பிள்ளைகள் இருவரும் பள்ளிக்கு சென்றுள்ளனர்.இந்த நிலையில் பாண்டியனும் பரிமளாவும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். இதனை அடுத்து மாலையில் பள்ளி முடிந்ததும் பிள்ளைகள் வீடு திரும்பி உள்ளனர்.
அப்போது தந்தை பாண்டியன் தூக்கில் பிணமாக தொங்குவதையும் பரிமளா தரையில் பிணமாக கிடப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இவர்களின் இறப்புக்குறித்து காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் கடந்த சில வருடங்களாக வெளிநாட்டில் வேலை செய்து வந்த பாண்டியன் சில மாதங்களுக்கு முன்பு தான் ஊர் திரும்பி உள்ளார்.
இங்கு வந்ததிலிருந்து அவருக்கு சரியான தூக்கம் வராததால் தான் தற்கொலை செய்துகொள்ள போவதாக அடிக்கடி கூறி வருவதாக தெரியவந்துள்ளது. மேலும் தூக்கில் பிணமாக தொங்கிய பாண்டியனின் இரு கைகளும் பின்புறமாக கட்டப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் பரிமளாவின் கழுத்து கயிற்றால் இறுக்கப்பட்டு இருந்துள்ளது. இதனால் சந்தேகப்பட்ட காவல்துறையினர் இருவரின் செல்போன்களையும் பறிமுதல் செய்து அவர்கள் கடைசியாக யாரிடம் எல்லாம் பேசி உள்ளனர்? என்பது குறித்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.