நம்மை இறைவனோடு நேரடியாக சம்பந்தப் படுத்துவது தீப வழிபாடு தான். தீபம் என்பது இறைவனின் அம்சம். நம் வீட்டில் தீபம் ஏற்றுவதால் வீட்டில் உள்ள தீய சக்திகள் வெளியேறுகின்றன. நம் வீட்டில் தீபம் ஏற்றுவதால் வீட்டில் பிரச்சினைகள் குறையும், புண்ணியம், ஞானம் அதிகரிக்கும். எனவே வீட்டில் காலை மாலை இரு வேளையிலும் விளக்கு ஏற்றுவது மிகவும் உகந்தது. அதுமட்டுமல்லாமல் நாம் எந்த ஒரு நல்ல நிகழ்வு ஆரம்பிக்கும் பொழுதும் முதல் வேலையாக தீபம் ஏற்றுவதையே கலாச்சாரமாக கொண்டுள்ளோம்.
வருடம் ஒருமுறை திருவண்ணாமலையில் ஏற்றப்படும் தீபம் அந்த பரமசிவனின் ஜோதி வடிவமே ஆகும். அந்தக் காட்சியை ஒரு முறையேனும் நாம் தரிசிக்க வேண்டும். தீபம் ஏற்றுவதால் இருள் நீங்கி அமைதியும், நிம்மதியும் வீட்டில் குடியேறுகின்றது. சில கோவில்களில் நாம் அணையா விளக்குகளை காணமுடியும். சில முக்கிய பண்டிகை நாட்களில் லட்ச தீபம், கோடி தீபம், ஏற்றி மிக விமரிசையாக கொண்டாடப்படும். அதேபோல் வீட்டின் புது மருமகள் வந்தால் முதல் செயலாக நாம் தீபம் ஏற்றவே கூறுவோம்.
தீபத்தை போன்று திரியிலும் பல வகை உண்டு. பருத்தி பஞ்சு திரி, புது மஞ்சள் வண்ண துணியில் திரி, புது வெண்மை துணியில் திரி, வெள்ளெருக்கு திரி, தாமரை தண்டு மற்றும் வாழைத்தண்டு திரிகள் உள்ளன. தீபம் ஏற்றும் போது திசை என்பது மிகவும் முக்கியம். கிழக்கு, மேற்கு, தென்கிழக்கு, வடக்கு, வட மேற்கு திசைகளில் நாம் தீபங்களை ஏற்றலாம். ஆனால் தெற்கு புறமாக மட்டும் தீபங்கள் ஏற்ற கூடாது.
விளக்கு ஏற்றும் பொழுது முழுமையான பக்தியோடு ஏற்ற வேண்டும். பிறரிடம் பேசிக்கொண்டு, தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே, கைபேசியில் பேசிக்கொண்டே ஏற்றுவதனால் எந்த பலனும் கிடையாது. ஆகவே இத்தகைய சிறப்பு மிக்க தீபம் ஏற்றும் முறையும் நாம் விடாமல் கடைபிடிப்பதால், நம் குடும்பம் எல்லாவிதமான ஐஸ்வர்யமும் பெற்று, சகல செல்வங்களுடன் மகிழ்ச்சியாக இருக்கும்.