ஆந்திர மாநிலத்தில் அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பிய இருவர் காணாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் மைலவரம் பகுதியை சேர்ந்த இருவர் மார்ச் மாதம் 14 ம் தேதி அமெரிக்காவில் இருந்து வீடு திரும்பியதாக கூறப்படுகிறது. இவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் காணாமல் போனதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் மக்கள் பீதியில் உள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சீனாவை வறுத்தெடுத்த கொரோனா, தற்போது அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் உச்சபட்ச பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் 724 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று மேலும் பரவாமல் தடுக்க 144 தடை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வெளிநாடுகளில் இருந்து சொந்தஊர் திரும்பும் இந்தியர்கள் கண்காணிக்கப்பட்டு அவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், தனிமைப்படுத்தப்பட்டிருந்த இருவர் காணாமல் போனது அப்பகுதியில் வசிக்கும் மக்களை பயத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்போது, காணாமல் போனவர்களை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.