மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூர் அருகே உள்ள மேல்புதுபட்டு கிராமத்தில் 24 வயதுடைய பூபதி என்பவர் வசித்து வருகிறார். இதே பகுதியில் வசிக்கும் 8 வயது மாணவி பள்ளிக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது அந்த மாணவியை பூபதி பின்தொடர்ந்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென பூபதி மாணவியின் வீட்டிற்குள் நுழைந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுபற்றி யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.
இதுபற்றி மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். உடனே மாணவியின் பெற்றோர் கடந்த 2019- ஆம் ஆண்டு அவலூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பூபதியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பாலியல் குற்றத்திற்காக பூபதிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். மேலும் 1,36,000 ரூபாய் அபராதமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 9 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.