ஒரு வீட்டில் புகுந்து NIA அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக NIA அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி மாணிக்கம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் NIA அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இரவு நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அந்த சோதனையின் போது வீட்டில் இருந்த லேப்டாப், செல்போன், சிம் கார்டுகள், டைரிகள் போன்ற பல்வேறு பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அதன்பிறகு 2 பேரை ரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணையும் நடத்தி வருகின்றனர். கடந்த 24-ஆம் தேதி பெங்களூருவில் பதுங்கி இருந்த அல்கொய்தா அமைப்புடன் தொடர்புடைய அக்தர் உசேன் லஸ்கர் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் தான் NIA அதிகாரிகள் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், ஈரோட்டிலும் சோதனை செய்வதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.