தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 7 மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் சாலை ஓரங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டது. இதன் அடுத்த கட்டமாக வீடுகளுக்கே நேரடியாகச் சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டமான இல்லம் தேடி கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணி நேற்று செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் செம்பரம்பாக்கம் பகுதியில் நடமாடும் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார். அதன்பிறகு நல்லாமூர், கீலக்கரணை, காட்டுதேவாதூர் மற்றும் விளங்கனூர் ஆகிய கிராமங்களில் தடுப்பூசி போடும் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அப்போது பேசிய அமைச்சர், “வருகின்ற நவம்பர் 30-ஆம் தேதிக்குள் அனைவருக்கும் முதல் தவனை கொரோனா தடுப்பூசி செலுத்தி 100% இலக்கை அடையும். செங்கல்பட்டு மாவட்டத்தில் முதல்முறையாக கிராமப்புறங்களில் உள்ள இல்லம் தேடி தடுப்பூசி செலுத்தும் முகாமை தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 7.64 கோடி மக்கள்தொகையில் நவம்பர் 1ஆம் தேதி வரை 5,91,18,663 நபர்களுக்கு தடுப்புசி செலுத்தப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து டெங்கு வைரஸ் தொற்றை தடுக்க கூடிய முன்னேற்பாடுகள் தமிழகம் முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் தீபாவளியை பாதுகாப்பான முறையில் கொண்டாட வேண்டும் என்றும் தீ தடுப்பு நடவடிக்கையாக அனைத்து சுகாதார மற்றும் மருத்துவ மனைகளில் தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டு உள்ளது” என்று கூறினார்.