Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வீடுகளை இடிக்க சென்ற அதிகாரிகள்…. பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு…. பொதுமக்களின் கோரிக்கை…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மஞ்சனிக்குப்பம் பகுதியில் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து 8 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் வீடுகளை காலி செய்யுமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். இந்நிலையில் மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் முரளி தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு போலீஸ் பாதுகாப்புடன் சென்றனர். இதனையடுத்து ஜேசிபி எந்திரம் மூலம் வீடுகளை இடிக்க முயன்ற போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் அமர்நாத் தலைமையில் பொதுமக்கள் ஜேசிபி வாகனத்தை முற்றுகையிட்டு வீடுகளை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது திடீரென ஒரு பெண் மண்ணெண்ணெய் கேனை எடுத்து வந்து தீக்குளிக்க முயற்சி செய்தார். இதனை பார்த்த போலீசார் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது வீடுகளை காலி செய்வதற்கு போதுமான கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும், எங்களுக்கு மாற்றிய இடம் வழங்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி கோரிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனால் தற்காலிகமாக அந்த வீடுகளை இடிக்காமல் அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Categories

Tech |