கொரோனா காரணமாக இந்தியாவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இப்போது கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு பொருளாதார நெருக்கடி நிலை ஓரளவு சீராகி இருக்கிறது. இந்நிலையில் நாட்டில் பணவீக்கம் சென்ற சில மாதங்களாக அதிகரித்துகொண்டே வருகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருகிறது. இதன் காரணமாக பணவீக்கத்தை கட்டுப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி தன் ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தும். அந்த அடிப்படையில் இந்த வருடம் 2 முறை தன் வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது.
இதனால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படகூடாது என மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன்களுக்கான வட்டிக்கு மானியம் வழங்க இருப்பதாக ஒன்றியஅரசானது திட்டமிட்டு இருக்கிறது. அத்துடன் இதுகுறித்து பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் இந்த திட்டத்திற்கு எள்ளளவு மானியம் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்பது பற்றி முடிவுகள் எடுக்கப்பட்டது.
அந்த வகையில் இந்த கூட்டத்தின் முடிவில் ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியிருப்பதாவது, “நாட்டிலுள்ள பண வீக்கத்தின் காரணமாக விவசாயிகளின் கடன்களுக்கான வட்டிக்கு மானியம் வழங்கப்பட இருக்கிறது. மேலும் இந்த மானியத்தை மீனவர்கள் மற்றும் கால்நடை விவசாயிகளும் பெறமுடியும் என தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி விவசாயிகளுக்கு 1.5 % வட்டி மானியம் வழங்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக விவசாயிகள் குறைவான வட்டியில் கடன்பெற முடியும். இந்த மானியம் வழங்க ரூபாய்.34,856 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.