ஈரோடு மாவட்டம் பெரும்பகுதி மற்றும் திருப்பூர் மாவட்டம் காங்கேயம், தாராபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் 5,480 ஏக்கரிலும், தாளவாடி பகுதியில் 3000 ஏக்கருக்கு மேல் மல்பெரி சாகுபடி செய்து பட்டுக்கூடு உற்பத்தி செய்யப்படுகின்றது. நடைபாண்டில் ஈரோட்டில் 568 ஏக்கரையிலும் தாளவாடி பகுதியில் 200 ஏக்கருக்கு மேல் புதிதாக பட்டு வளர்ப்பு சாகுபடிக்குள் வந்துள்ளன. இதனிடையே கோபிசெட்டிபாளையம்,தாராபுரம் மற்றும் காங்கேயம் பகுதிகளில் மொபைல் மார்க்கெட்டிங் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் பட்டு உற்பத்தி அமைப்பு உள்ள இடத்திற்கு அருகிலேயே அவற்றை விலை நிர்ணயம் செய்து வாங்கிச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு வழக்கத்தை விட கூடுதல் லாபம் கிடைக்கின்றது. இதனைத் தொடர்ந்து விவசாயிகளை ஊக்கப்படுத்தி பட்டு வளர்ப்பு சாகுபடி பரப்பை அதிகரிக்கும் நோக்கத்தில் ஒவ்வொரு வருடமும் பட்டு வளர்ப்பு விவசாயிகளுக்கு தலா 72 ஆயிரத்து 500 மதிப்பிலான தளவாட கருவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வருடம் நூறு விவசாயிகள்,தளவாடி பகுதியில் பதினைந்து விவசாயிகளுக்கு 52 ஆயிரம் மதிப்பில் குச்சி வெட்டும் இயந்திரம் மற்றும் புழு வளர்ப்பு தளவாடங்கள் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகைக்கு உபகரணங்கள் வழங்கப்படும். இது தொடர்பான அறிவிப்பை பட்டு வளர்ச்சித் துறை ஈரோடு உதவி இயக்குனர் வெளியிட்டுள்ளார்.